பேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு (1920-2020) – நவீன கல்வித்துறையின் முதுபெரும் அறிஞர் | பா.சந்திரசேகரன்
பேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு (1920-2020) – நவீன கல்வித்துறையின் முதுபெரும் அறிஞர் | பா.சந்திரசேகரன்
- Chandrasekaran Balakrishnan
- July 29, 2020
- Tamil Articles

இன்றைய கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கல்வித்துறையைக் கையாள அரசும் அதைச் சார்ந்த சிலரும் தவறான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது, ஏனென்றால், மாணவர்களின் சுகாதாரத்தையும் அவர்களின் மனநிலையையும் இவர்கள் முற்றிலும் புரிந்துகொள்ளவில்லை என்பது பலவகையில் அவர்களின் அணுகுமுறையில் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கொடும் நோய்த்தொற்றுக் காலத்தில் கல்வி அரசியலாக்கப்படுவது நல்லதல்ல. கல்வி மாணவர்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது. எனவே அதை அறிவார்ந்த வகையில் முறைப்படுத்துவது அவசியம். இந்த தவறான அணுகுமுறைக்கு, கல்வி சார்ந்து அரசின் அதிகாரப் பகிர்ந்தளித்தல் இல்லாமலிருப்பதும் ஒரு காரணம்.
இதுபோன்ற பல்வேறு அசாதாரணமான சூழ்நிலையில் கடந்த காலத்தில் கல்வித்துறையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான அறிவுரையை வழங்கிச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியவர் தமிழகக் கல்வித்துறையின் முதுபெரும் அறிஞர் மறைந்த பேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு அவர்கள். கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேல் தமிழகக் கல்வித் துறைக்கும் இந்தியக் கல்வித்துறைக்கும் பெரும் பங்காற்றியவர். கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கும் மேல், தரம் மிக்க பள்ளி மற்றும் உயர் கல்வியை அனைவருக்கும் வழங்கிட அயராது பாடுபட்டவர். பேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு அவர்கள் தனது நூறாவது வயதில் மார்ச் 29, 2020 அன்று சென்னையில் காலமானார்.
அவரது மறைவு ஒட்டுமொத்த கல்வித்துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சரளமாக நீண்ட உரையாற்றக் கூடிய வல்லமை படைத்தவர் பேராசிரியர் சிட்டிபாபு. நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் எழுதியவர். குறிப்பாக அவரின் ‘இந்தியாவில் உயர் கல்வி: இடர்ப்பாடுகளும் கட்டுப்பாடுகளும்’ மற்றும் ‘சிந்தனைச் சிகரங்கள்’ ஆகியவை வெகுவாக மதிக்கப்பட்ட புத்தகங்கள்.
தமிழக அரசு மற்றும் மத்திய அரசு அமைப்பாக்கப்பட்ட, கல்வி தொடர்பான பல்வேறு குழுக்களின் தலைவராகவும், உறுப்பினராகவும் பணியாற்றி, காலத்திற்கேற்ப பல மாற்றங்களைச் செய்யப் பரிந்துரைத்தார். அவர் பரிந்துரைத்த பெரும்பாலான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டன. 1983-85ம் ஆண்டு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட தேசிய ஆசிரியர் குழுவில் பேராசிரியர் சிட்டிபாபு உறுப்பினராக இருந்தார்.
இவர் தனது அறுபது ஆண்டுகால கல்விப் பணியில் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, பல கல்வி சார்ந்த கருத்தரங்குகளில் உரையாற்றி, கல்வியில் உள்ள ஆழ்ந்த நுணுக்கங்களை ஆராய்ந்து, அதையெல்லாம் நமது பள்ளி மற்றும் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் புகுத்த தக்க ஆலோசனைகளை வழங்கி, அவற்றை உலகத் தரத்திற்கு செம்மைப்படுத்த அயராது பாடுபட்டார். காமன்வெல்த் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினராக இருந்தார்.
கல்வித்துறையில் பல முக்கிய பொறுப்புகள் வகித்து முத்திரை பதித்தவர் இவர். 1986ம் ஆண்டு நடைபெற்ற சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், பேராசிரியர் சிட்டிபாபுவின் சிறந்த கல்விப் பணியைப் பாராட்டி கௌரவ டாக்டர் (Honaris Causa) பட்டம் வழங்கப்பட்டது. 1986-87ம் ஆண்டில் இந்தியாவின் அகில இந்தியப் பல்கலைக்கழகத்தின் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.
பேராசிரியர் சிட்டிபாபு அவர்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒரு முறையும் (1975-1978), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டு முறையும் துணைவேந்தராக (1980-1986) பணியாற்றி, அவை தமிழகத்தின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களாக உயரப் பாடுபட்டவர். அதற்கு முன்பாக, வேலூர் அரசு தொழிற் கல்லூரியின் முதல் முதல்வராகவும், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநராகவும், கல்லூரிக் கல்வித்துறையின் இயக்குநராகவும் மிகச்சிறப்பாகப் பணியாற்றியவர். 1992ல் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் முதல் துணைத் தலைவராகவும், மாநிலத் திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
பேராசிரியர் சிட்டிபாபு அவர்கள் நவம்பர் 7, 1920ம் ஆண்டு அன்று திரு சை.வேணுகோபால் மற்றும் திருமதி ரமாபாய் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவர் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ வரலாறு (ஹானர்ஸ்) மற்றும் எம்.ஏ. வரலாறு பயின்று, அதே கல்லூரியில் வரலாற்றுத் துறையில் 1942ம் ஆண்டு விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.
மேலும் சென்னை மாநிலக் கல்லூரியில் 1947ம் ஆண்டு வரலாற்றுத் துறை பேராசிரியராகவும் சிறிது காலம் பணிபுரிந்தார். பிறகு தமிழக அரசின் நேரடிப் போட்டித் தேர்வு மூலம் பணியில் சேர்ந்து, பின்னர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், மண்டலக் கல்வி அலுவலர், துணை இயக்குநர் பள்ளிக்கல்வித்துறை போன்ற பணிகளில் சிறப்பாகப் பணியாற்றினார். பணியில் இருந்து விடுப்பு எடுத்து, 1951-1952ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். பேராசிரியர் சிட்டிபாபு ஃபுல் பிரைட் ஸ்காலர் மூலம் அமெரிக்காவில் கல்வித்துறையில் பயிற்சி பெற்றவர்.
இவரது சீரிய ஆளுமையினாலும், சிறந்த நிர்வாகத் திறனாலும் சீர்திருத்தத்தாலும் மேலும் ஏற்றங்களைப் பெற்றது மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும். 1970களில் தென்தமிழகத்தில் உயர் கல்வியினை வழங்கி வந்த ஒற்றைப் பல்கலைக்கழகமாக மதுரை பல்கலைக்கழகம் திகழ்ந்தது. 1975ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சிட்டிபாபு அவர்கள் துணைவேந்தராகப் பதவியேற்ற பிறகு, தமிழகத்தில் முதன்முறையாக திறந்தநிலை பல்கலைக்கழக முறை மூலம் அஞ்சல் வழிக் கல்வி முறையை அறிமுகப்படுத்தினார்.
இந்த முறை இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று நாட்டிலே முன்னோடித் திட்டமாகத் திகழ்ந்தது. பல்வேறு காலச் சூழல்களில் பள்ளிப் படிப்பினை இடையில் கைவிட்டவர்களுக்கு, தங்களது பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பைத் தொடர்ந்து பயில, இந்தத் திறந்தவெளி பல்கலைக்கழக முறை மிகப்பெரும் வாய்ப்பாகக் கருதப்பட்டது. இன்றளவும் இந்த முறை மாணவர்கள் உயர் கல்வி பெற்று முன்னேற பெரிய அளவில் உதவுகிறது.
மேலும் 1980ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பதவியேற்ற பேராசிரியர் சிட்டிபாபு, திறந்தநிலைப் பல்கலைக்கழக முறையை இங்கும் அறிமுகப்படுத்தினார். இங்கும் அவர் பல்வேறு பிரச்சினைகளை லகுவாகக் கையாண்டு, உயர் கல்வியிலும் பல்கலைக்கழக நிர்வாகத்திலும் ஏராளமான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அவரின் முயற்சியால் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்தாக்கவியல் துறை தொடங்கப்பட்டுப் பல முக்கியப் பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டன.
வரலாற்றுத்துறையில் மிகவும் ஆர்வமாக இருந்த பேராசிரியர் சிட்டிபாபு 1994ம் ஆண்டு தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை என்ற இயக்கத்தை உருவாக்கி அதன் தலைவராக பத்தாண்டு இருந்தார். டாக்டர் சி.பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய டாக்டர் மு.வ. அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படைப்புக்கு அணிந்துரை வழங்கியபேராசிரியர்
சிட்டிபாபு
‘வரலாறு மனித முன்னேற்றத்திற்குப் படிப்பினையாகும் தகுதி உடையது. அதிலும் ‘வாழ்க்கை வரலாறு’ முறைப்படி எழுதப்படுமானால், மனித இன வளர்ச்சிக்கு வழிகாட்டும் சிறப்பினைப் பெறும். கற்பனையில் முகிழ்க்கும் கதைகளைவிட, உண்மைகளில் மலரும் வாழ்க்கை வரலாறு, வாழ்க்கை அனுபவங்களை நேரடியாக உதவி, மனிதனை நல்வழிப்படுத்தும் ஆற்றலுடையதாகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கல்வித்துறையில் ஆரம்ப காலத்திலிருந்தே அனைத்து தரப்பட்ட மக்
களுக்கும் தரமான பள்ளி மற்றும் உயர் கல்வியை உறுதி செய்வதில் மிகவும் பொறுப்புடன் செயல்பட்டவர் பேராசிரியர் சிட்டிபாபு. 1991ம் ஆண்டு தமிழக அரசு நர்சரி மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கும் தனியார்ப் பள்ளிகளை ஆராய்ந்து ஒழுங்குபடுத்தத் தேவையான பரிந்துரைகளை வழங்க ஒரு வல்லுநர் குழுவினை உருவாக்கியது. அதன் தலைவராக பேராசிரியர் சிட்டிபாபு நியமிக்கப்பட்டார். அவர் பரிந்துரைத்தவற்றை நெறிப்படுத்த 1993ம் ஆண்டு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
2004ம் ஆண்டு கும்பகோணத்தில் தனியார்ப் பள்ளியில் தீ விபத்தில் கிட்டத்தட்ட நூறு குழந்தைகள் இறந்தனர். அதன் பிறகு பேராசிரியர் சிட்டிபாபு அவர்களின் தலைமையில் அமைப்பிக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகளின்படி, பள்ளிகளில் குறைந்தபட்ச உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேணடும் என தமிழகப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தனியார்ப் பள்ளிகள் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவித்தன. அவை நீதிமன்றம் வரை சென்றன.
தமிழக முழுவதும் எண்ணற்ற பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் மற்றும் பலவேறு பல்கலைக்கழகங்களுக்கும் சென்று கல்வியறிவை வளர்த்தவர் பேராசிரியர் சிட்டிபாபு. ஆரம்பக் கல்வி முறையில் தமிழ் வழிக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பது அவரது நீண்டகால பரிந்துரை. இந்தப் பரிந்துரைக்கு எந்த அரசும் செவி சாய்க்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது.
பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் சிறந்து செயல்பட தன்னாட்சி மிகவும் அவசியம் என்று வலியுறுத்தியவர் பேராசிரியர் சிட்டிபாபு. ஏனென்றால், கல்வி நிறுவனங்கள் முழு திறனுடன் செயல்பட மற்றும் நிதி மற்றும் இதர விஷயங்களில் சரியான முடிவுகள் எடுக்க தன்னாட்சி உதவும் என்று எண்ணினார் அவர். இது சம்பந்தமாக முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குக் கடிதமும் எழுதினார் அவை பல்கலைக்கழக மானியக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் இடம்பெற்றன. பேராசிரியர் சிட்டிபாபு பல்வேறு கல்வி நிறுவனங்களில் நிர்வாகக் குழு தலைவர், உறுப்பினர், ஆலோசகர் போன்ற ஏராளமான பொறுப்புகளை வகித்தவர்.
காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகள் அவர்களின் மிக நீண்டகால பக்தரும் கூட. காஞ்சி மகா சுவாமிகள் மறைவுக்குப் பிறகு பேராசிரியர் சிட்டிபாபு ‘காஞ்சி மகா முனிவர் – தெய்வீகத்தின் தொலைநோக்குப் பார்வை’ என்றொரு ஆங்கிலக் கட்டுரையை எழுதினார். அதில் பேராசிரியரின் நீண்டகால நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் ஆன்மிகக் கொள்கையில் மிகவும் பற்றுக் கொண்டிருந்தார்.
இம்மண்ணில் நூறாண்டு காலம் வாழ்வாங்கு வாழ்ந்த மூத்த கல்வியாளர் பேராசிரியர் சிட்டிபாபு, வள்ளுவர் சொன்னது போல் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்ற கூற்றுக்கு இணங்க, தமிழகம் என்றென்றும் அவரின் கல்விப்பணியைப் பின்பற்றி, தரம் மற்றும் அனைவருக்கும் சமமான கல்வி பெற வழிவகை செய்து, தொடர்ந்து உயரும் என்று உறுதிகொள்வோம்.
